For this Day:

;

கம்பராமாயணம் – சுஜாதா


1. கம்பராமாயணம் – சுஜாதா

இந்த விழாவில் (கோவை கம்பன் கழக விழா) பேசியவர்கள், பேசப் போகிறவர்கள் எல்லாரும் என்னைவிட அதிகமாக கம்பனைப் படித்து ஆராய்ந்து தேர்ந்தவர்கள். இவர்களுக்கிடையில் அரைகுறையான என்னை அழைத்துப் பேச வைத்திருப்பது, அதுவும் கம்பனைப் பற்றி பேச வைப்பதிலிருந்து நான் எவ்வளவு தூரம் தப்பாக மதிக்கப் பட்டிருக்கிறேன் என்பது தெரிகிறது. இருந்தும் இந்தச் செயலை, இந்தப் பெரியவர்களின் பெருந்தன்மைக்கு உதாரணமாகக் கொண்டு தெரிந்ததைப் பேசுகிறேன்.

"கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்"
(படிக்காதவர் படித்தவர் முன் பேசாமல் இருப்பதே நல்லது)

என்று வள்ளுவர் எச்சரித்தாலும் "அறையும் ஆடரங்கும் மடப்பிள்ளைகள் தரையில் கீறினால் தச்சரும்" காயமாட்டார்கள் என்று கம்பனே உத்தரவாதமாய் சொல்வதால் "ஆசை பற்றி" அறைகிறேன்.

கம்பராமாயணத்துடன் என் அறிமுகம் மற்ற எல்லா தமிழ் மாணவர்கள் போல பள்ளிப் பாடத்தில் தான் கிடைத்தது. எஸ்.எஸ்.எல்.சி. அப்போது இண்டர்மீடியட் கட்டாயப் பாடங்களில் கம்பராமாயணத்தின் சில உபத்திரவமில்லாத படலங்கள் திரும்பத் திரும்ப பாடமாக வைக்கப் படும். எனக்கு அயோத்தியா காண்டத்தில் கைகேயி சூழ் வினையும் குகப் படலமும் கிடைத்தது. மற்ற பேர் போல் "ஆழி சூழ் உலகமெல்லாம்" போன்ற பாடல்களை நெட்டுருப் போட்டாலும் எனக்கு வாய்த்த தமிழாசிரியர்கள், குறிப்பாக செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் ஐயம்பெருமாள் கோனார் கம்பனைப் பாடிப் பாடி சொல்லித் தருவார் இனிமையாக. அதனால் கம்ப ராமாயணத்தின் மற்ற பாடல்களைத் தேடித் பிடித்துப் படிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதனுடன் அப்போது நான்-டீடைல்டு பாடமாக "ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்" என்னும் புத்தகம் வைக்கப் பட்டிருந்தது. அதில் யுத்த காண்டத்தின் பல சிறந்த பாடல்கள் மேற்கோள்களாக காட்டியிருந்தது, அந்தச் சின்ன வயசிலேயே கம்பராமாயணம் ஒரு வித்தியாசமான நூல் என்பதை உணர வைத்தது. டி.கே.சி.யின் கம்பர் தரும் ராமாயணமும் கல்கி பத்திரிகையில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தது. அப்போது யாராவது ஜோசியர், அந்த இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்னும் நூலை எழுதிய பேராசிரியர் அ.ச.ஞா. அவர்களுடன் ஒரே மேடையில் நாற்பது வருஷம் கழித்துக் கம்பனைப் பற்றிப் பேசப் போகிறாய் என்று சொல்லியிருந்தால் எனக்கு ஜோஸ்யத்தில் நம்பிக்கை வந்திருக்கும்.

கம்பனின் சொல்லாக்கமும் சந்தமும் உவமைத் திறனும் தமிழில் இன்று எழுதும் அதனை எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் எதாவது ஒரு விதத்தில் பாதித்திருப்பதை என்னால் நிரூபிக்க இயலும்.

ஆனால் அறிவியல் பயின்றவன் என்கிற ரீதியில் கம்பனில் உள்ள அறிவியல் கருத்துக்கள் என்னை வசீகரிக்கின்றன. அவைகளைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது பொருத்தமாகும் எனத் தோன்றுகிறது.

2. கம்பராமாயணம் – சுஜாதா

முதலில் என்னைக் கவர்வது கடவுள் தத்துவம். கம்பன், ஒவ்வொரு காண்டத்தின் ஆரம்பத்திலும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலை வைத்திருக்கிறார். காவ்யம், ராமன் என்று அவதாரப் புருஷனைப் பற்றி இருந்தாலும், எம்பெருமான் பின் பிறந்தோர் இழைப்பரோ பிழைப்பு என்று இராமனை பெருமான் ஸ்தானத்திற்கு போற்றி அடிக்கடி ஏற்றிச் சொன்னாலும், இந்தக் கடவுள் வாழ்த்துக்களில் கூறப்படும் கடவுள்கள் எல்லாம் மிகப் பொதுப் படையாகவே இருக்கின்றனர்.

"உலகம் யாவையும்" என்னும் முதல் பாட்டு உலக பிரசித்தம். எல்லாருக்கும் தெரியும். அதை விட மற்ற காண்டங்களின் அறிமுகப் பாடல்கள் அந்த அலகிலா விளையாட்டுடைய தலைவரை

"வான் நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறனும் உளன்" என்றும்,

"வேதம் வேதியர் விரிஞசன் முதலோர் தெரிகிலா

ஆதி தேவர்"

என்றும், ஒரு காண்டத்தில் அதை விட,

"ஒன்றே என்னின்  ஒன்றே ஆம்

பலவென்று உரைக்கின் பலவே ஆம்

அன்றே என்னின் அன்றே ஆம்

ஆமே என்றின் ஆமே ஆம்

இன்றே என்னின்  இன்றே ஆம்

உளதென்றுரைக்கின் உளதே ஆம்"

போன்ற வரிகள் நவீன  க்வாண்டம் இயற்பியலின் இறுதி சிந்தனையாக வெளிப்படும் எதிர் மறைகளின் ஒருமைப்பாடாக வெளிப்படும் கடவுள் தத்துவத்துக்கு ஒத்துப் போகிறது.

"தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை தன்னுளே நின்றுதாம் அவற்றுள் தங்குவான் பின்னிலன்  முன் இவன் ஒருவன் பேர்கிலன்" என்று சொல்லும் போது நவீன இயற்பியல் கருத்துக்களுக்கு வெகு அருகில் உள்ளது.

கம்பராமாயணத்தில் அன்றாட அறிவியல் செய்திகளும் அங்கங்கே கிடைக்கின்றன. அயோத்தி நகரத்து மதில்களை வருணிக்கும்போது "நால்வகைச் சதுரம் விதி முறை நாட்டிய" ஆர்க்கிட்டெக்சர்  கட்டிட இயல் இருக்கிறது. அப்போது தற்காப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட கருவிகளின் பட்டியல் இருக்கிறது.

"சினத்து அயில், கொலைவாள், சிலை, மழு, தண்டு, சக்கரம், தோமரம், உலக்கை, கனத்திடை உருமின் வெருவரும் கவண்கல்" என மேகத்தைத் தொடும் ராக்கெட்டுகள் கூட இருக்கிறது. கூர்ந்து கவனித்து பட்டியலிட்டிருக்கிறார். ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும். குறிப்பாக உலக்கையை எப்படிப் பிரயோகித்தார்கள் என்று யோசிக்கலாம்.

சீதையின் திருமணத்தின் போது திருமணச் சடங்கில் மணலை விரித்து தருப்பை சாரதி மென்மலர் கொண்டு நெய் சொரிந்து எரிமுன் மூட்டி தாரை வார்த்தல், தீவலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததி காணல் என்று விரிவாக உரைத்திருந்தாலும் தாலி பற்றி ஒரு வார்த்தை இல்லை. அது ஏன் என்றும் மேற்படி ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கலாம்.

தசரதனுக்கு வருவது 'ஹார்ட் அட்டாக்'  என்று நம்ப இடம் இருக்கிறது.

"வேய் உயர் கானம் தானும் தம்பியும்

மிதிலைப் பொன்னும்

போயினான் என்றான் என்ற போழ் தத்தே

ஆவி போனான்"

என்று பொசுக்கென்று போய்  விடுகிறார்.

"நோயும் இன்றி நோன்  கதிர் வாள்

வேல் இவை இன்றி மாயும்"

என்று விரைவான மரணத்தை கம்பர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏரோப்ளேன் டேக் ஆஃபும் இருக்கிறது ஆரண்ய காண்டத்தில்.

"மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடெலாம் மாய்ந்து

 விண்ணின் ஓங்கியது ஒரு நிலை"

என ராவணன் தேர் தரையில் ஓடி ஜிவ்வென்று எகிறிப் பறந்ததின் சுவடுகள் தெரிகின்றன.

3. கம்பராமாயணம் – சுஜாதா

ராமாயணத்தில் வேதியியல் இருக்கிறது.

"துள்ளியின் இரதம் தோய்ந்து தொல்நிறம் கரந்து வேறாய்
வெள்ளிபோல் இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார்"

என்னும்போது, பாதரசத்தின் ஒரு துளி பட்டால் வெள்ளியும் செம்பும் வேறுபடுத்தி விடலாம் என்ற ரசாயன செய்தி வருகிறது.

நம் நாட்டு நவீன போர்களில் போல் ஒற்றர்களை அனுப்பும் முறையும் தெரிய வருகிறது. ராவணன் அனுப்பிய ஒற்றன் வந்து,

"அளவு நோக்கி குரங்கென உழல்கின்றான்"

என்னும்போது எதிரிகள் போல வேஷம் மாற்றி அனுப்பும் வழக்கம் தெரிகிறது.

அந்த ஒற்றனை வீடணன் சுலபத்தில் கண்டுபிடித்து விட, அவனைக் கொன்று விட வேண்டும் என பலர் வற்புறுத்த, இராமன்,

"தாம் பிழை செய்தா ரேனம் தஞ்சம் என்று அடைந்தார் தம்மை
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடுதீர்"

என்று விடுவிக்க அந்த ஒற்றனைப் பார்த்து,

"நோக்கினீர் தானை எங்கும் நுழைந்தனிர் இனி வேறு ஒன்றும்
ஆக்குவது இல்லை ஆயின் அஞ்சல் என்று அவனை
போக்குமின் விரைவின் என்று அனுப்பி விட
"உய்ந்தனம்" என்று போனார்.

அம்மாதிரி போர்க் கைதிகளைக் கொல்லாத ஜெனீவா கன்வென்ஷனின் சாயல் இதில் தென்படுகிறது.

ராஜ்ஜியம் எப்படி நடத்த வேண்டும் என்று இராமன் கூறும் அறிவுரைகள் இன்றைய ஹர்ஷத் மேத்தா விவகாரம் வரை செல்லுபடியாகிறது.

"புகையுடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உண்ணும்
மிகை உடைத்து இவ்வுலகம் நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
பைக உடை சிந்தை யார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன் உரை நல்க"

என்று சுக்ரீவனுக்கு அறிவுரை கூறும்போது, அரசியலில் உள்ளவர்கள் முக்கியமாகப் பகைவர்களைப் பார்த்து கொஞ்சம் சிரிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அந்த காலத்து "சிவில் இன்ஜினியரிங்" முறைகள் யுத்த காண்டத்தில் இலங்கைக்கு அணை கட்டும்போது தெரிகிறது.

குரங்குகள் சேர்ந்து அணை கட்டினால் எப்படி இருக்கும்?

"பேர்த்தன மலை சில பேர்க்கப் பேர்க்க நின்று
ஈர்த்தன சில சில சென்னி ஏந்தின
தூர்த்தன சில சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன சில சில ஆடிப் பாடின"

இந்தக் காலத்தில் பெரிய கட்டடம் கட்டும்போது ஏறக்குறைய இதுதான் நிகழ்கிறது. சிலர் பேர்க்கிறார்கள்; சிலர் இழுக்கிறார்கள்; சிலர் சும்மா சப்தம் போடுகிறார்கள். சிலர் ஐலசா பாடுகிறார்கள்.

"காலிடை ஒரு மலை உருட்டி கைகளின்
மேலிடை மலையினை வாங்கி விண்தொடும்
சூலுடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய
வாலிடை ஒருமலை ஈர்த்து வந்தவால்"

கம்பர் பக்கத்தில் இருந்து பாலம் கட்டுவதைப் பார்த்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

கம்பர் விவரிக்கும் மாயமான் ஒரு 'ரோபாட்' போல இயங்குகிறது.

"காயம் கனகம், மணி கால் செவி வால்,
பாயும் உருவொடு இது பண்பலாம் மாயம்"

என்று இலக்குவன் அதைச் சொல்ல இராமன்,

"நில்லா உலகின் நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர் மன்உயிர்தாம்
பல்லாயிரம் கோடி பரந்துளதால்
இல்லாதன இல்லை இலக்குமரா"

என்று கம்பர் அந்த நாட்களிலேயே எதிர்காலத்து அதிசயங்களுக்கு வழி வகுத்துள்ளார்.

4. கம்பராமாயணம் – சுஜாதா

இவ்வாறு பல அறிவியல் பூர்வமான கருத்துக்களை – செய்திகளை – சொல்லிக் கொண்டே போகலாம். மருந்து இருக்கிறது. எப்படிப்பட்ட மருந்து ?

"மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்

உடல் வேறு வகிர்களாக

கீண்டாலும்  பொகுந்துவிக்கும் ஒருமருந்தும்

படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்

மீண்டேயும் தம்உருவை அருளுவதும் ஓர் மெய்ம் மருந்தும் உள வீர

ஆண்டேகி கொணர்தி"

லைஃப் சேவிங் டிரக்ஸ், பிளாஸ்டிக்  ஸர்ஜரி என்று பல கருத்துக்கள் தென்படுகின்றன இதில்.

கம்பன் காவியத்தில் தூரங்கள் யோசனைகளாக கணக்கிடப்பட்டன. யோசனை என்பது எத்தனை கிலோ மீட்டர் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசனை செய்யலாம்.

"எம் மலைக்கும் பெரிதாய வடமலை"

என இமயமலையைக் குறிப்பிட்டு,

"அம் மலையின் அகலம் எண்ணின்

மொய்ம்மறந்த திண் தோளாய்,

முப்பத்து ஈராயிரம் யோசனைகள்"

என்கிறார்.

மேருவிலிருந்து ஒன்பதாயிரம் யோசனை நீலகிரி, அதிலிருந்து நாலாயிரம் யோசனை மருந்து வைகும் கார்வரை என்னும்போது, எளிய  ஸர்வே முறைகள் அவர் காலத்திலிருந்திருக்க வேண்டும். இல்லையேல் முப்பத்து இரண்டாயிரம் என்று அதனை சரியாகச் சொல்ல முடியாது.

பிரம்மாஸ்திரத்தை வர்ணிப்பது அணு ஆயுதம் போல் தான் தெரிகிறது.

"கோடி கோடி நூறாயிரம் சுடர்க்கணைக் குழாங்கள்

மூடி மேனியைச் முற்றுறச் சுற்றின மூழ்க"

என்னும்போது மிகப் பெரிய ஆயுதம்தான் அது.

அதுபோல் இராமன் திரும்பும் புஷ்பக விமானத்தில் பல பேருக்கு இடம் இருக்கிறது.  போயிங் 747-ஐ விட பெரிசாக இருந்திருக்க வேண்டும்.

"சூரியன் மகனும் மன்னு வீரரும் எழுபது வெள்ள

வானரரும் கன்னி மாமதில் இலங்கை மண்ணோடு

கடற் படையும் துன்னினார் நெடும் புட்பக மிசை

ஒரு சூழல்"

என்று அந்தப் பெரிய விமானத்தில் இன்னமும் இடம் இருக்கிறதாம்.

"பத்துநால் என அடுக்கிய உலகங்கள் பலவின்

மெத்துயோனிகள் ஏறினும்  வெளியிடம்

 மிகுமால்…"

என்ன Space Station அளவுக்குச் சொல்கிறார்.

அனுமன் மருத்துவ மலையை எடுத்து வரச் செல்லும்போது நிஜமாகவே அல்ட்ராஸானிக் வேகத்தில்தான் சென்றிருக்க வேண்டும்.

"தோன்றினான் என்னும் அந்தச் சொல்லின்

முன்னம் வந்த ஊன்றினன்"

என்கிறார்.

இவ்வாறு பல கருத்துக்களைக் கொண்ட கம்பராமாயண காலத்தில் இந்தச் சாதனங்கள் எல்லாம் இருந்தன என்று சொல்ல வரவில்லை நான். அபார கற்பனை மிக்க ஒரு இலக்கிய கர்த்தாவால் எதிர்காலத்தை நோக்க முடியும் என்பதே என் வாதம்.

நாங்கள் எழுதும் 'சைன்ஸ் ஃபிக் ஷன்' எல்லாமே அதுதானே? கம்பன்தான் முதல்Science fiction எழுத்தாளன் என்பேன்.

5. கம்பராமாயணம் – சுஜாதா

கம்பனின் கருத்துக்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அவன் கண்ட யுடோப்பியா என்பேன். எல்லாருக்கும் ஒரு ஆதர்ச தேசம் உண்டு. ஒரு யுடோப்பியா, ஒரு எல்டெராடோ. நவீன விஞ்ஞானக் கதை எழுத்தாளர்களுக்கும் அவரவர் பார்வையில் ஆதர்ச தேசத்தின் மிக விஸ்தாரமான வர்ணனை இந்தப் பால காண்டத்தில் இருக்கிறது. வாங்கிப் படித்துப் பாருங்கள்.

சலுகை விலையில் கிடைக்கிறது. வாங்குபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் வாகன சௌகர்யங்களும் வடக்கு திசையிலிருந்து நற்செய்தியும் தனலாபமும் கிடைக்கும்.

ஆற்றுப் படலத்திலும், நகரப் படலத்திலும் கோசல நாடும், அயோத்யா நகரும் எந்த வகையில் சிறந்து இருந்தன என்று சொல்கிறார்.

"ஆலவாய்க் கரும்பின் தேனும்
அரிதலைப் பாளைத் தேனும்
சோலைகீழ் கனியின் தேனும்
தொடைகிழி இறாலின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும்
வரம்பு இகந்து ஓடி வங்க
வேலைவாய் மடுப்ப
உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ"

என்று அக்காலத்து அயோத்தியில் தேன் பாய்ந்தது என்கிறார்.

இந்த நாட்களில் ரத்தம் பாய்கிறதை அவர் எதிர்பார்த்திருந்தால் ?

கோசல நாட்டை வர்ணிக்கும்போது கம்பர்,

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநீர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரையிலாமையால்;
ஒண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்

(கம்ப ராமாயணம் 1 . 2 . 53 )

என்று கூறுகிறார். கோசல நாட்டில் கொடுப்பவர்களுக்கு கௌரவம் இல்லை என்று கூறுகிறார்.ஏன் ? கை நீட்டுபவர்களே இல்லை; கை நீட்டுபவர்கள் இருந்தால்தானே கொடுப்பவர்களுக்குப் பெருமை. உண்மைக்குக் கௌரவம் இல்லை.எல்லாரும் சத்திய சந்தர்கள். பண்டிதர்களுக்கும் கௌரவம் இல்லை; எல்லாரும் வித்வான்களாக இருக்கிறார்கள். பலத்துக்கு கௌரவம் இல்லை. எல்லாரும் பலவான்களாக இருக்கிறார்கள்.

கம்பர் இதையே இன்று வேறு விதமாக,

கடைகள் இல்லை ரேஷன் கார்டிலாமையால்,
விடைகள் இல்லை ஓர் வினாவிலாமையால்,
லஞ்சமில்லை ஓர் துரோகமின்மையால்,
லஞ்சமில்லை அரிசிப் பஞ்சமின்மையால்,
இச்சையில்லை ஓர் காமமின்மையால்,
பிச்சையில்லை எழ்மையின்மையால்,
வாயில் இல்லை குறுக்கு வழி இலாமையால்,
கோயில் இல்லை பாபர் மசூதி இலாமையால்"

என்று எழுத விரும்பியிருப்பார். நன்றி. வணக்கம்.

–முற்றும்.

கட்டுரைகள் எழுதுவது எனக்கு எப்போதும் பிடித்த விஷயம். கட்டுரைகளில் தான் வெளிப்படையாக எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி வெளிவாக கருத்துச் சொல்ல முடிகிறது. இருந்தும் மக்கள் கட்டுரைகளை விட கதைகளை விரும்பி நாடுவது கொஞ்சம் சோகமே. அதற்குக் காரணம் கட்டுரைகளை பலர் கடினமாக எழுதும் பழக்கம் இன்றும் நிலவுகிறது.

2 comments:

சந்திரசேகர்ன் said...

கண்களில் நீர் பனிக்கிறது உம் போல்வாரை இழந்ததற்கு. சுஜாதா அவர்களை, போன்றோரை வையத்துள் பிறக்க வைத்து ஏனையோர் மேலுயர அருள்கூட்டுமவாய் இறையே.

Unknown said...

அருமை! சுஜாதா போல் வேறு யார் உளர்?