அணிலும் எலியும் !
பகவான் ரமணர் உரைகேட்கப்
பக்தர் இருந்தார் அமர்ந்தபடி
அகமும் முகமும் மலர்ந்தபடி
அருளுரை சொன்னார் கனிந்தபடி
அணில்போல் இருங்கள்; தவறில்லை!
ஆனால் எலிபோல் கூடாது!
மணிமொழி இதனை உதிர்த்தபடி
மவுனமானார் நம் ரமணர்!
காரணம் வேண்டிப் பக்தர்கள்
காத்துக் கொண்டே இருந்தார்கள்
பூரண ஞானி விடைசொன்னார்
புன்னகை ஒன்றைத் தந்தபடி!
உண்ணும் அணிலைப் பாருங்கள்;
உண்டது போதும் என உணர்ந்தால் கொண்ட கனியை அதன்பின்னர்க்
கொறிப்பதில்லை; ஓடிவிடும்;
ஆனால் எலியோ பதுக்குவதில்
ஆசை கொள்ளும்; மறுபடியும்
தானாய் வந்து பொருள்தேடும்
தனக்கு மீறிச் சேர்த்துவிடும்
போதும் என்ற மனம் இன்றிப்
பொருளைச் சேர்க்கக் கூடாது
நீதி இதுதான், எனச்சொல்லி
நிறுத்தி அருளினார் ரமணமுனி!
No comments:
Post a Comment