For this Day:

;

Vande Matharam

வந்தே மாதரம்...!

1882-ஆம் ஆண்டு வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "ஆனந்தமடம்' நாவலில் இடம்பெற்ற "வந்தேமாதரம்' பாடல் தேசியக்கவி ரவீந்திரநாத் தாகூர் முயற்சியால், 1896-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த 12-ஆவது ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் ஆரம்ப நிகழ்ச்சியாக முதன் முறையாகப் பாடப்பட்டது.

மகாத்மா காந்தி அவர் எழுதும் கடிதங்களின் தலைப்பில் "வந்தேமாதரம்' எனக் குறிப்பிடத் தொடங்கினார். "வந்தேமாதரம்' என்பது தேசபக்தியை ஊக்குவிக்கும் மந்திரச் சொல் என்றார் அரவிந்தர்.

1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரஸ் மாநாட்டில் சுதந்திர இந்தியாவின் முதல் தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டு இந்திய மக்களின் சுதந்திர உணர்வால் ஈர்க்கப்பட்ட மேடம் காமா, அந்தக் கொடியை ஏற்றி அறிமுகப்படுத்தினார்.

1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த போது "வந்தேமாதரம்' பாடல் மிகப்பெரிய சரித்திர தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் தாகூரின் "ஜனகனமன' பாடலையே தேசிய கீதமாக ஏற்க முடிவு செய்தனர். ஏனெனில் இந்தப் பாடலில் உள்ள வரிகள் அனைத்து இனத்தவரும் ஏற்கும் வகையில் இருப்பதாகக் கருதினர். ஆனால் 1947-ஆம் ஆண்டு 14-15 நள்ளிரவில் இந்தியா சுதந்திரமடைந்த போது சுசேதா கிருபாளனி "வந்தே மாதரம்' பாடலைத்தான் பாடினார்.

சுந்திரமடைந்த பின்னரும் 1973-ஆம் ஆண்டு மும்பை முனிசிபல் தேர்தலின் போது "வந்தேமாதரம்' பாடலை பாடியதற்காக எழுந்த பிரச்னையில் நான்கு உயிர்கள் பலியாயின.

வந்தேமாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜியின் மாளிகை கொல்கத்தாவில் நைஹட்டி அருகில் "கத்தால்பாரா' கிராமத்தில் உள்ளது. 1838- ஆம் ஆண்டில் பிறந்த சட்டர்ஜியுடன் உடன்பிறந்தோர் மூன்று சகோதரர்கள். கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த சட்டர்ஜியின் மாளிகை 230 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இவர் எழுதிய நாவல்களில் துர்கேசநந்தினி, கபால குண்டலா, பிஷ்பிரிக்ஷா போன்றவை பிரபல நாவல்களாகும். "ஆனந்தமடம்' நாவலில்தான் "வந்தேமாதரம்' பாடல் இடம் பெற்றது. 1872-ஆம் ஆண்டில் அவர் நடத்திய "வங்க தர்ஷன்' பத்திரிகை இந்த மாளிகையில்தான் அச்சிடப்பட்டது.

1894-ஆம் ஆண்டில் 56-ஆவது வயதில் பங்கிம் சந்திர சட்டர்ஜி காலமானார். 1920-ஆம் ஆண்டில் அவரது மனைவியும் மரணமடைந்தார். இவர்களுக்கு மூன்று பெண்கள். இவரது மரணத்திற்குப் பின்னர், இவர் வசித்துவந்த வீடு கவனிப்பாரற்று சிதிலமடையத் தொடங்கியது. 1938-ஆம் ஆண்டில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியபோது அவர் வாழ்ந்த வீட்டைச் சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. அவர் பயன்படுத்திய அறை, மேஜை, நாற்காலி, அலமாரி போன்றவை பாதுகாக்கப்பட்டு அவர் இருந்த அறை மட்டும் சீரமைக்கப்பட்டு "பங்கிம் பவன்' என்ற பெயரில் பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டது. 1962-ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசு ரூ. 20 லட்சம் செலவில் அந்த மாளிகையை மீண்டும் சீரமைத்து நூலகம், ஆய்வு மையம், மற்றும் கூட்ட அரங்கு ஆகியவற்றை அமைத்தது. மாளிகையின் பிற்பகுதியில் சட்டர்ஜியின் தூரத்து உறவினர்கள் வசித்து வருகின்றனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது நாட்டையே எழுச்சிக்குள்ளாக்கிய "வந்தேமாதரம்' என்ற மந்திர வார்த்தை 1997-ஆம் ஆண்டில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான "மா துஜே சலாம்' என்ற பாடலுடன் ஒலித்தபோது மீண்டும் இந்தியா உயிர்த்தெழுந்ததை மறக்க இயலாது

No comments: