For this Day:

;

படித்ததில் பிடித்தது...

padiththadhil pidiththadhu
நடவுக்குப் பயிரைக் கட்டி
லாவகமாய் வீசுகிறார்
குருவுணித் தாத்தா.
அவர் கணித்த இடத்தில்
மிகச்சரியாக விழுகிறது நாத்துக்கட்டு.
நாற்றை
சீரான லயத்தில் தொடர்ந்து
அள்ளி முடிகிறாள்
செல்லக்கா பாட்டி.
உழைத்துக் களைத்த மரங்களிரண்டும்
நடவு வயலின் நடுவே
இளைப்பாறுகின்றன.
தாத்தாவின்
சேற்றுப்புண்ணுக்கு
யாரும் பார்க்காத நேரம்
சேற்றைக் குழப்பிப் பத்திடுகிறாள்.
'போ கழுத'  என்றபடி
கொண்டையைப் பிடித்து இழுக்கும் தாத்தாவை
உதறியபடி வெட்கச் சிரிப்போடு மீறுகிறாள் பாட்டி.
நாளை பயிராகும்
வயலில்
இன்றே தொடங்குகிறது
அன்பின் நடவு. 
பயணிக்கும் பல்லவி
ஈருருளிப் பயணங்களில்
வேறு வழியற்று
'முன்னிருக்கையை'
விட்டுக்கொடுத்துத்
தகப்பன் தாய்க்கு
நடுவில் நசுங்கியமர்ந்து தலையை நீட்டி
வேடிக்கை பார்த்துத்
தானும் மகிழும்
தலைப் பிள்ளைகள் பற்றித் தனியாய்
கவிதையென
எழுத
என்ன இருக்கிறது.
கண்திறக்கும் கடவுள் 
கண்மூடிய பிரார்த்தனை நேரங்களில்
ஒற்றைக் கண்ணைத் திறந்து பார்க்கும்
குழந்தைமூலம்
எல்லோரையும்
பார்த்து ஆசீர்வதித்துச்
செல்கிறார் கடவுள்.
போக்குவரத்து மாற்றம்
இவ்விரவில்
பனியின் கனமேறி
தண்டவாளத்தில்
தலைவைத்துப் படுத்திருக்கும்
கழுத்து நீண்ட மஞ்சள் பூவிற்காக
இன்று மட்டும் நிறுத்திவையுங்கள்
ரயில் போக்குவரத்தை.

No comments: