இரண்டு வருஷம் முன்வேலை நிமித்தமாக, சென்னைக்கு வந்தவுடன் தொண்டை கட்டிக் கொண்டு, ஜுரம் வந்தது. தி.நகரில் பதினைந்து வருஷத்துக்கு முன் எனக்குப் பழக்கப்பட்ட டாக்டர் விஜயராகவனிடம் சென்றேன். கிளினிக் பெரிதாக மாறவில்லை, காத்துக்கொண்டு இருந்தபோது, பலகையில் இரண்டு வரி எழுதியிருந்ததைப் படித்து ஆச்சர்யப்பட்டேன்.
'Sulphonylurea போன்ற டயபட்டீஸ் மருந்துகளைக் கொண்டு வரும் மெடிக்கல் ரெப்களுக்கு இங்கே அனுமதி இல்லை.' அடுத்த வரி இன்னும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. உங்களுக்கு டயபட்டீஸ் இருக்கா அதை ரிவர்ஸ் செய்யலாம்!"
டாக்டரிடம் விசாரித்தேன். ஞாயிற்றுக்கிழமை இதைப்பற்றிப் பேசுவேன். வந்து கேளுங்களேன்" என்றார்.
ஞாயிறு அவர் பேச்சைக் கேட்டபோது தெளிவு பிறந்தது. வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கூற்றை முழுவதும் நிராகரித்தார்.
மேலும் - தினமும் காலை பிரட் சாப்பிடுங்கள், இரவு சப்பாத்தி சாப்பிடுங்கள், நிறையப் பழங்கள் எடுத்துக்கோங்க, வாக்கிங் போங்க, தினமும் ஆறு வேளை சாப்பிடுங்கள் போன்ற எல்லாவற்றையும் நிராகரித்தார்.
அவருடைய இரண்டு மணி நேரம் பேச்சின் சாராம்சம் இதுதான். மனிதன் நூறு வயது வாழப் பிறந்தவன். டயபடீஸ், ரத்த அழுத்தம், தைராய்ட் போன்றவை மாறிவரும் வாழ்க்கை முறையால் நம் உடல் நமக்குச் சொல்லும் எச்சரிக்கை சமிக்ஞைகள். டைப்-2 டயபடீஸ் போதுமான அளவு இன்சுலினைச் சுரப்பதில்லை என்று தப்பான ஆலோசனையின் பெயரில் மாத்திரைகள் கொடுக்கிறார்கள். இது முழுவதும் தப்பு. அதிக இன்சுலின்தான் பிரச்னையே !
மது குடித்துப் பழகியவர்களுக்கு குடிக்கவில்லை என்றால் உடல் நடுங்கும். அதைப்போக்க அவனைக் குடி என்று சொன்னால் எவ்வளவு முட்டாள்தனமோ அதே மாதிரி தான் நீரிழிவுக் குறைபாடு உள்ள ஒருவருக்கு மாத்திரை கொடுப்பதும். இதற்குப் பெயர் 'இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்.' 'இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்'க்கு வில்லனே சர்க்கரை மற்றும் கார்ப்ஸ் - காரணத்தை அறிந்து அதன் மூலகாரணத்தைக் களைய வேண்டும்.
சுலபமாகப் புரிய வேண்டும் என்றால், உங்களுக்கு டைபாய்ட் காச்சல் வந்தால் ஜுரம் வரும். இதற்கு சாதாரண பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டால் தாற்காலிகமாக ஜுரம் சரியாகும். ஆனால் டைபாய்ட் குணமாகாது. அதற்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக மூல காரணமான அந்தக் கிருமிகளைத்தான் அழிக்க வேண்டும். அதேபோல்தான் சர்க்கரை வியாதிக்கு மூல காரணம் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ். அதை சரிசெய்ய வேண்டும். இதற்கு ஒரே வழி மாவுச் சத்து என்னும் 'கார்ப்' குறைத்துக்கொண்டு நிறையக் கொழுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். இதை LCHF (Low Carb High Fat) என்பார்கள். கூடவே அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்தால் உங்கள் டயபட்டீஸுக்கு குட்பை.
உண்ணாவிரதமா? என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். உண்ணாவிரதம் இருந்தால் நம் உட லுக்கு நல்லது. அப்போதுதான் நம் உடலில் இருக்கும் கொழுப்பை சீக்கிரமாக எரிக்க முடியும். நம் உடல் இத்தனை நாள் பெட்ரோல் என்ஜின் மாதிரி மாவுச்சத்தில் இயங்கிக்கொண்டு இருக்க, அதை டீசல் என்ஜின் மாதிரி கொழுப்பில் இயங்க வைக்க வேண்டும்.
ஏன் மாவுச்சத்து குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறேன். நம் உடலில் சர்க்கரை, மாவுச்சத்து, புரோட்டின் இவை எல்லாம் உள்ளே சென்ற பிறகு குளுகோஸாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் அதிகம் சர்க்கரை இருந்தால் உடனே இன்சுலின் சுரக்கிறது. ஆனால் சுரக்கும் இன்சுலின் வேலை செய்ய முடிவதில்லை. எப்படி கூட்டமான பஸ்ஸில் நாம் உள்ளே நுழைய முடியாமல் இருக்கும் போது நம்மைப் பிடித்து உள்ளே தள்ளுவார்களோ அதே போல மாத்திரை சாப்பிடும்போது ஏற்படுகிறது. இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன். அதை செயற்கையாக சுரக்க வைப்பதால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அதனால்தான் நீரிழிவு நோய் வந்தால் உடல் உறுப்புகள் ரிப்பேர் ஆகின்றன.
தீர்வு - அதிக இன்சுலின் சுரக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அதிகம் சர்க்கரை, மாவுச் சத்து உங்கள் உணவிலிருந்து நீக்க வேண்டும். குளுகோஸ் உற்பத்தியாகும் உணவுகளான கார்ப் வகை உணவுகளையும் (அரிசி, கோதுமை), பழங்களையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். கூடவே அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்தால் நீங்கள் டயபட்டீஸ் இல்லாமல் உயிர் வாழலாம்."
இட்லி, தோசை இல்லாமல் எப்படி வாழலாம்? இதனால் என்ன என்ன பாதிப்புக்கள்?
இரண்டு ஆண்டுகளாக இட்லி, தோசை மட்டும் இல்லை, மாத்திரைகூட இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். மேலும் என்னுடைய கிளைக் கோசிலாக்கப்பட்ட ஈமோகுளோபின் எனப்படும் HbA1c 6 கீழ் வந்துவிட்டது. உடல் எடை ஒன்பது கிலோ குறைந்து 'பாடி மாஸ் இண்டக்ஸ்' 'பிஎம்ஐ' நான் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்லுகிறது. என் இடுப்பளவு நான்கு இன்ச் குறைந்து நல்ல தூக்கம், மூட் ஸ்விங்ஸ் எதுவும் இல்லாமல் எனர்ஜி லெவல் அதிகமாகி, பத்து வயது குறைந்த மாதிரி ஆகிவிட்டது. பயப்பட வேண்டாம், உயரம் குறையவில்லை!
நம் உடலுக்குச் சக்தி இரண்டு முறைகளில் கிடைக்கிறது - கார்பிலிருந்து கிடைப்பது கிளைகோஜன். இன்னொரு கொழுப்பிலிருந்து கிடைக்கும் கீடோன் என்பது. கிளைகோஜன் கேஸ் மாதிரி குப் என்று கிடைக்கும் சக்தி ஆனால் கீடோன் கரி அடுப்பு மாதிரி நின்று நிதானமாக எரியும்.
நம் உடலை எப்படி இதற்கு மாற்றுவது என்று குழம்ப வேண்டாம். நம் உடல் மிக இன்டலிஜென்ட்!. அதிகம் கார்ப் கொடுக்காமல் அவ்வப்போது உண்ணா விரதம் இருந்தால் நம் உடல் ஆட்டோமேட்டிக்காக கொழுப்பை எரிக்க ஆரம்பிக்கும்.
இரண்டு வருஷம் முன் இதை எல்லாம் டாக்டர் விளக்கிய பிறகு, நேராக ஸ்ரீரங்கம் சென்று நம் பெருமாளைச் சேவித்துவிட்டு மாத்திரையை (டாக்டர் அறிவுரையுடன் ) நிறுத்தினேன். இன்று எனக்கு டயபடீஸ் இல்லை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
பிகு: மேலே குறிப்பிட்ட முறை டைப்-2 டயபடீஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே. நீங்கள் இதை உங்கள் டாக்டரை ஆலோசித்துப் பின்பற்றுங்கள்.
இந்த வார கல்கி இதழில் இருந்து...
No comments:
Post a Comment