இயற்கையாய் இணைந்தவர்களுக்கு,
'யாதும் ஊரே'-வின் பசுமை வணக்கங்கள்...
நாம் வாழும் பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். மனிதர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகிறது. பூமியில், நாம் அனுபவிக்கும் இந்த சுற்றுசுழல் நமக்கானது மட்டுமல்ல. அது நம் எதிர்கால தலைமுறையினருக்கு, நம் கண்ணுக்கு தெரியாத அனைத்து ஜீவராசிகளுக்கும் திருப்பிக் கொடுக்கவேண்டிய கடன் என்பதை கருத்தில் கொண்டு "யாதும் ஊரே" இணைவோம் இணைப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
எதிர்காலம் குறித்த சிந்தனையும், எதிர்காலத் தலைமுறையின் ஆரோக்கியமான சூழலுக்கான சிந்தனையும் ஒருங்கிணையும் புள்ளியாக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு, "யாதும் ஊரே" திட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டதற்கு, முதற்கண் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மாற்றங்கள் மந்திரத்தால் நிகழ்வதில்லை.. நல்ல மனங்களால் நிகழ்கிறது என்பதன் ஆரம்ப அடையாளம் இது.
சுற்றுச்சுழலை பாதுகாக்கவும்... எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் அதிசயங்களினை விட்டுச்செல்லவும், சுற்றுச்சுழல் பாதுகாப்பில் முழுமையான மாற்றம் கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது. சிந்தனை இல்லாத செயலோ, செயலற்ற சிந்தனையோ முழுபயன் தராது. சிந்திப்போம்... செயல்படுவோம்... அதன்படி சுற்றுச்சுழல் கல்வி, நீர்நிலைகள் பராமரிப்பு, கழிவுப் பொருள் மேலாண்மை மற்றும் மரம் நடுதலும் பராமரித்தலும் போன்ற நான்குமுனை செயல்பாடுகளையும், முழுமையாக ஒருங்கிணைத்து நாம் செயல்பட இருக்கிறோம்.
வரும் முன் காப்பதே அறிவுடைமை. தொலைநோக்கான பயணத்திற்கான முதல் படி இது. இயற்கையை நேசிக்கும், போற்றும் பாதுகாக்கும் ஓர் இயக்கமாக 'யாதும் ஊரே' செயல்படும். இணைவோம்... இணைப்போம்...
நன்றிகளுடன்,
Date: 2016-01-13 14:08 GMT+05:30
No comments:
Post a Comment